தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். கேரள கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி,இந்திய உளவுத்துறையான ஐ.பி சிறப்பு இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.இந்த நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கி்றார்.
இது தவிர ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார். உத்தராகண்ட் மாநில ஆளுநராக இருந்த பேபி ராணி மெளரியா சமீபத்தில் தமது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடதக்கது. .
அசாம் மாநில ஆளுநராக உள்ள ஜக்தீஷ் முகி, நாகாலாந்து மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் தமது உத்தரவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு வணக்கமும் வாழ்த்தும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
தங்களது வருகை தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தங்களை தமிழ் நாடு வரவேற்கிறது என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.