தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி என்றாலே வழக்கமாக பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் கொண்டாடப்படவில்லை.
இந்நிலையில் இந்த முறையும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும்,எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஏனைய மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த முறை தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் கொண்டாட அனுமதிக்கப்படவில்லை.வீடுகளில் மட்டுமே வைத்து வணங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதை அடுத்து,மக்களை பாதுகாக்கவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருப்பதாக முதல்வர் விளக்கம் அளித்திருக்கிறார்.
பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.வீடுகளில் களிமண்ணாலான விநாயகர் சிலைகளை மட்டுமே வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும்,விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.