January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேரளாவில் பரவும் ‘நிபா வைரஸ்’; விழிப்புடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தல்

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ‘நிபா வைரஸ்’ பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்,இந்த வைரஸ் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

உயிரிழந்த குறித்த சிறுவனின் உடலில் இருந்து இரத்த மாதிரிகள், எச்சில் போன்றவை எடுக்கப்பட்டு புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து பரிசோதனையின் முடிவில் அந்த சிறுவன் ‘நிபா’ வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,  தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் உயிரிழந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இரத்த மாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிபா வைரஸ் உறுதியானதையடுத்து, குறித்த நபர்களுடன் 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நோய் பரவலின் தீவிரத்தை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரம்,கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் குறித்து அறியவும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் விரைவு மருத்துவக் குழுவினர் கேரளா சென்றுள்ளனர்.

இதேவேளை,நிபா வைரஸ், பழம் தின்னி வெளவ்வால்களில் இருந்து பரவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.