November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல்; தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் ‘நிபா வைரஸ்’ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு – கேரளா எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ‘நிபா வைரஸ்’ தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள மாநில முதலமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 188 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அப்போது கோழிக்கோட்டில்தான், தென்னிந்தியாவில் முதன்முதலாக நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதே மாவட்டத்தில் 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அச்சிறுவன் இன்று (05) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழ் நாட்டிற்கு தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு – கேரளா எல்லையோர மாவட்டங்களில் சிகா, நிபா வைரஸ் தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தை ஒட்டி இருக்கக் கூடிய தமிழக மாவட்டங்களில் ஏற்கனவே கொரோனோ கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லைகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.