July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்பேயோ ஒக்டோபர் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் புதுடில்லி, இலங்கையின் கொழும்பு, மாலைத்தீவின் மாலே மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

புதுடில்லியில், இராஜாங்க செயலாளர் பொம்பேயோவும் பாதுகாப்பு செயலாளர் மார்க் ரி. எஸ்பரும் மற்றும் அவர்களது சம அந்தஸ்துடைய இந்திய அதிகாரிகளும், அமெரிக்க-இந்திய விரிவான உலகளாவிய மூலோபாய பங்காண்மையை முன்னேற்றுவதற்கும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திலும் உலகத்திலும் ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை ஊக்குவிப்பதற்கான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்குமான மூன்றாவது வருடாந்த அமெரிக்க-இந்திய 2+2 அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

உறுதியானதும் இறையாண்மையுடையதுமான இலங்கையுடனான பங்காண்மையொன்றுக்கும் சுதந்திரமானதும் திறந்ததுமான இந்தோ-பசுபிக் பிராந்தியமொன்றுக்கான எமது பொதுவான இலக்குகளை முன்னோக்கி நகர்த்துவதற்குமான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை கோடிட்டுக்காட்டுவதற்காக இராஜாங்க செயலாளர் பொம்பேயோ கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்பின்னர், எமது நெருக்கமான இருதரப்பு உறவை மீள்உறுதிபடுத்தவும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு தொடக்கம் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது வரையான பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் எமது பங்காண்மையை முன்னேற்றுவதற்காகவும் இராஜாங்க செயலாளர் பொம்பேயோ மாலேவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அத்துடன், பொது உரையொன்றை நிகழ்த்துவதற்காகவும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியமொன்றுக்கான இரு நாடுகளினதும் நோக்கத்தை உறுதிப்படுத்த தமது சம அந்தஸ்துடைய இந்தோனேசிய அதிகாரிகளை சந்திப்பதற்காகவும் இராஜாங்க செயலாளர் ஜகார்த்தாவுக்கு விஜயம் செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.