November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”திரையில் வெளியான பின்னரே ஓ.டி.டி.யில் வெளியிடவேண்டும்”: திரையரங்க உரிமையாளர்கள்

தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியான பின்னரே ஓடிடியில் திரைப் படங்கள் வெளியிடப்பட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய திரையரங்கில் வெளியாகி 4 வாரங்களின் பின்னரே ஓடிடியில் படங்களை திரையிட வேண்டும் என உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திரைப்படங்களின் ஓடிடி விற்பனைக்கான பிரிவியூ காட்சிக்கும் திரையரங்குகளை வழங்குவதில்லை எனவும், அதேபோல் ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடும்போது 4 மாதங்களுக்குப் பிறகு அந்த படங்களை திரையரங்குகளில் வெளியிடலாம் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நான்கு மாதங்கள் முடிவடைந்த சில திரைப்பட உரிமையாளர்கள் அவற்றை திரையரங்குகளில் வெளியிடுவதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல், இரு தரப்புக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

இறுதியாக ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்கு பின்னர் ,ஓடிடியில் வெளியிட்டால் மட்டுமே படங்களை திரையிட முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.