தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், நாட்டு மாடுகளை பாதுகாக்கவும், தமிழக கலாசாரம்,பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் கலப்பின மாடுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அந்த நபர் தாக்கல் செய்திருந்த மனுவில் நாட்டு மாடுகளுக்கு பெரிய ‘திமில்’ இருப்பதால் அவற்றைப் பிடிக்க ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இலகுவாக இருக்கும் எனவும், ஆனால் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இன்றைய தினம் (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த மனுவில், வெளிநாட்டு இன மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தடை இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
ஆனால், இதனை நிராகரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள் கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு மாடுகள் என கால் நடை மருத்துவர்கள் சான்று அளித்த பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவை கலந்து கொள்ள முடியும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொய் சான்றளிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.