வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் உட்டபட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களில் பல நூறு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
எனினும் இறந்தவர்களில் எவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதியாகவில்லை.
இந்தியாவில் சமீபத்திய கொவிட் அறிக்கைகள் கொடிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலையிலிருந்து நாடு மெதுவாக மீண்டு வருவதை காட்டுகின்றது.
இதனிடையே இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தின் கிராமப் புறங்களில் பரவும் “மர்ம காய்ச்சல்” மற்றும் இறப்புகள் கவலையை அதிகரித்துள்ளது.
எனினும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களில் உள்ள மருத்துவர்கள் நுளம்புகளால் பரவும் டெங்கு, வைரஸ் தொற்று, மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
இந்த காய்ச்சலினால் பாதிக்கப்படும் பலர் மூட்டு வலி, தலைவலி, நீரிழப்பு மற்றும் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகளை காண்பிப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில், கால்கள் மற்றும் கைகளில் தடிப்புகள் பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் சந்தர்ப்பத்தில் குருதி சிறு தட்டுக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை காட்டியதாகவும், இது டெங்குவின் கடுமையான வடிவத்தை காட்டுவதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“நோயாளிகள், குறிப்பாக குழந்தைகள், மருத்துவமனைகளில் மிக விரைவாக இறக்கின்றனர்” என ஃபிரோசாபாத் மாவட்டத்தின் மிக மூத்த சுகாதார அதிகாரி வைத்தியர் நீதா குல்ஷரேஸ்தா பி.பி.சி யிடம் கூறுகிறார்.
ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் இறந்துள்ளனர்.பெண் கொசுக்களால் பரவும், டெங்கு முக்கியமாக ஒரு வெப்பமண்டல நோய் மற்றும் இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பரவி வருகிறது.
டெங்கு நோய் உலகின் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவுகிறது. ஆனால் 70% நோயாளர்கள் ஆசிய நாடுகளில் இருந்து பதிவாகி வருகின்றனர்.
நான்கு டெங்கு வைரஸ்கள் உள்ளன.இதில் இரண்டாவது டெங்கு நோய்த் தொற்றின் போது பெரியவர்களைவிடவும் சிறுவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக இறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.