January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை முகாம்களுக்கு வெளியே குடியமர்த்த வேண்டும்’ -சீமான்

தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களை முகாம்களுக்கு வெளியே குடியமர்த்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம், முகாம்களே இல்லாத தமிழ் நாட்டினை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு, கல்வி, திறன், மேம்பாடு போன்றவற்றிற்காக 317.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் சிறப்பு முகாம்களில் வசிக்கும் ஈழ சொந்தங்களை முகாம்களுக்கு வெளியே குடியமர்த்தி, அவர்களது நல வாழ்வினையும் உறுதி செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையான முகாம்களே இல்லாத தமிழ் நாட்டினை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மொத்தமாக 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.