November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு எதிரான வரி,அபராத நடவடிக்கையை கைவிட முடியாது”

சசிகலா மீதான வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை என்பதால், தனக்கு எதிரான வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி மற்றும் அபராதத்தை கைவிட முடியாது என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1994- 95 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலில், 28 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்கு  வி.கே.சசிகலா கணக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, நடைபெற்ற இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில், சசிகலா அதே நிதியாண்டில் 80 ஏக்கர் நிலத்தை வாங்கி, கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, இலஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1994-95 ஆம் ஆண்டுக்கான வருமான வரியாக 48 லட்சம் ரூபாய் செலுத்தும்படி சசிகலாவுக்கு 2002 ஆம் ஆண்டு வருமான வரித் துறை உத்தரவிட்டது.

ஆனால், வருமான வரித்துறையின் இந்த உத்தரவை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராதம் தொடர்பான வழக்கை கைவிடுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கை சசிகலாவுக்கு பொருந்தாது என்று வருமான வரித்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,’குற்ற வழக்கில் சசிகலா தண்டனை பெற்றுள்ளதால், வருமான வரி மற்றும் அபராதத்தைக் கைவிடும் சுற்றறிக்கை இவருக்கு பொருந்தாது’ என்று வாதிட்டுள்ளார்.

இதற்கு சசிகலா தரப்பில் நேரடி வரிகள் வாரியத்தின் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தும் என்றும் வாதிடப்பட்டது.

இது தொடர்பாக, சசிகலா தரப்பில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.