January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தே.மு.தி.க எனும் வேர் என்றும் அசைக்க முடியாதது; விஜய பிரபாகரன்

தே.மு.தி.க எனும் வேர் என்றும் அழிக்க முடியாதது என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதனையொட்டி அவரது மகன் விஜய பிரபாகரன் திருப்பூரில் பொது மக்களுக்கும், பாடசாலைகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார்.

அப்போது பேசிய விஜய பிரபாகரன்,தனது தந்தை விஜயகாந்த் சிகிச்சை பெறுவதற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் யாரும் பயப்பட வேண்டாம்.மீண்டும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் விஜயகாந்த் மிக விரைவில் சிகிச்சை முடித்து, பழைய நிலைக்கு திரும்புவார்.

40 வருடம் சினிமாவிலும், 15 வருடம் அரசியலிலும் போராடுகிறார் விஜயகாந்த்.விருப்பு,வெறுப்புகளைத் தூக்கி வீசிவிட்டு அனைத்து நிர்வாகிகளும் கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

தே.மு.தி.க.வை எந்த நோக்கத்திற்காக ஆரம்பித்தோமோ அதனை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம்.தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது.தே.மு.தி.க எனும் வேர் என்றும் அழியாதது ,அது ஆலமரமாக வளரும்.எத்தனை பேர் கட்சியை விட்டுச் சென்றாலும்,தே.மு.தி.க ஆல மரமாக வளரும்.

இளைஞர்களுக்கு தே.மு.தி.க எப்போதுமே உறுதுணையாக இருக்கும்.சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி கட்சியை மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.

விஜயகாந்தைப் பார்த்து தான் இன்றைக்கு பலர் அரசியலுக்கு வருகிறார்கள்.அவருக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசியலில் முன்னேறிச் செல்வோம்.

தமிழக மக்களின் அன்பு மட்டுமே போதும் எனக் கூறியுள்ள விஜய பிரபாகரன் காசு ,பணம் எதுவும் வேண்டாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் என்னைத் தூக்கி எறிந்தாலும் சுவரில் அடித்த பந்து போல் திரும்ப உங்களிடம் தான் வருவேன் என உருக்கமாக கூறியிருக்கிறார் விஜய பிரபாகரன்.

மேலும் தோல்வியை வெற்றியாக்கும் திறமை தே.மு.தி.க.வுக்கு உண்டு.அது மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

2006-ம் ஆண்டு தே.மு.தி.க எப்படி இருந்ததோ,மீண்டும் கட்சியை அந்த நிலைமைக்கு கொண்டு வர நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என விஜயகாந்தின் பிறந்த நாளில் அவரது மகன் விஜய பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.