July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 5.1 ரிச்டர் அளவில் நில அதிர்வு!

Earth Quake common Images

தமிழகத்தில் சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் அருகே வங்கக்கடலில் 5.1 ரிச்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிச்டர் அளவு கோலில் 5.1 ஆகப் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இதேபோல், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு சுமார் 322 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து 296 கி.மீ. கிழக்கு திசையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

நில நடுக்க அதிர்வுகள் காக்கி நாடா, சென்னை, குண்டூர், திருப்பதி ஆகிய இடங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் ஆலந்தூர், அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார் பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இந்த தகவலை அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனால் மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் இதனால் சுனாமி குறித்த அச்சம் தேவையில்லை எனவும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.