July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஒக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும்; எச்சரிக்கும் நிபுணர் குழு

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஒக்டோபர் மாதத்தில் உச்சம் பெற வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் சிறப்பு நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஆங்காங்கே அதிகமாகி வருவதாக நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், தற்போதைய சூழலில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் பாதியளவேனும் மூன்றாம் அலையில் இருக்கக் கூடும் எனவும் குறிப்பாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு இந்த நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் ஒக்ஸிஜனை இருப்பு வைக்க வேண்டும் என நிபுணர் குழு தெரிவித்திருக்கிறது.

ஆகவே தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அந்த குழு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அதேநேரத்தில் மூன்றாவது அலை பரவலை எதிர்கொள்வதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் இதற்காக சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.