July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் முதலாவது டி.என்.ஏ தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியா ஒப்புதல்!

(Photo  :twitter/Zydus Cadila)

உலகின் முதலாவது டி.என்.ஏ தடுப்பூசியான சைகோவ்-டி தடப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா இதுவரை 5 வகையான கொவிட் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் கெடிலா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள, சைகோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசிக்கு மத்திய அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சைகோவ்-டி தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரையிலானோருக்கு முதற்கட்டமாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் முதலாவது ‘டி.என்.ஏ.’ தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசி மூன்று டோஸ்களாக இன்ஜெக்டர்’ மூலம் செலுத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 28,000  தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளதாக கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் முதல்முறையாக 12 – 18 வயதுக்கு உட்பட்ட 1,000 பேரிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளது.

குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கு சைகோவ்-டி (ZyCoV-D) என்ற ‘டி.என்.ஏ.’ தடுப்பூசி செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களில் 66 சதவீதத்தினருக்கு, அறிகுறியை வெளிப்படுத்தும் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைத்ததுள்ளதாக கெடிலா நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்காவில் பல டி.என்.ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகள் விலங்குகளுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.

எனினும் மனிதர்களுக்காக வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட உலகின் முதல் டி.என்.ஏ கொரோனா தடுப்பூசி இதுவாகும்.

அத்தோடு, இந்தியாவின் முதலாவது ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்து சைகோவ் டி.
இம்மருந்து ஊசி அல்லாத சாதனம் மூலம் உடலில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் மருந்து தோலுக்குள் செலுத்தப்பட்டு, தசைகளுக்குச் செல்கின்றன.

டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசிகளின் விலை ஏனைய தடுப்பூசிகளை விடவும் மலிவாக இருக்கும் என மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.