(FilePhoto)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியர்கள் 150 பேர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தாலிபன்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னதாக 150 இற்கும் மேற்பட்ட இந்தியர்களை தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தியர்கள் கடத்தப்பட்டதற்கும் தாலிபன்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்கள் பலரையும் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் இவர்கள் அனைவரும் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இதனை மறுத்து தாலிபன்கள் அமைப்பு இந்தியர்களை கடத்தவில்லை என கூறியுள்ளது.
முன்னதாக கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதுடன், அவர்களை மீட்க இந்திய விமானப்படை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதற்கமைய காபூல் விமான நிலையத்தில் இருந்து 85 இந்தியர்கள் இன்று (21) மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இருந்தபோதிலும் விமான நிலையத்தில் சிக்கல் நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதுடன், குறிப்பாக காபூலில் 400 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படை ஆப்கானிஸ்தானுக்கு அருகில் உள்ள தஜிகிஸ்தானில் இருந்து இந்திய விமானங்களை இயக்கி காபூலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா அங்குள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்திய விமானப்படையின் சி-17 விமானம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதற்கமைய தயார் நிலையில் இருந்த விமானப்படை சி -130 ஜே விமானம் காபூலில் இருந்து இன்று 85 இந்தியர்களுடன் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தானில் இருந்து காபூலுக்கு விமானங்களை இயக்கி இந்தியர்களை மீட்டு வர விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.