July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த ஓபிஎஸ் – ஈ.பி.எஸ்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர்.

சென்னை, கிண்டியில் வைத்து இடம்பெற்ற இந்த சந்திப்பில் சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததுடன், அதிமுக, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி ஆளுநரிடம் மனு ஒன்றை ஓபிஎஸ்- ஈ.பி.எஸ் வழங்கியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காரசார விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று திடீரென அதிமுகவைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர்.

இதன்போது, கொடநாடு கொலை வழக்கு முடிவுறும் தருவாயில் இருக்கும் நிலையில், மீண்டும் அதனை திமுக ஆரம்பத்திலிருந்து விசாரிப்பதாக பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்தோடு தற்போது ஆளும் திமுக, அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் சாடியுள்ளனர்.

அதேநேரம் ஜெயலலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வீட்டில் சில கொள்ளை கும்பல், சயான் மற்றும் அவரின் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர் என என எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு எதற்காக திமுக இவ்வளவு ஆதரவாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்? என எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவன் ஆஜராகியிருக்கிறார் என்ற ஒரு செய்தியையும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

”ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் அரசு இருக்க வேண்டுமே தவிர, ஆதரவாக இருக்கக்கூடாது.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவதாக ஐயம் பட்டு உள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சயான் அளித்த வாக்குமூலத்தில் என்னையும் முக்கிய நிர்வாகிகளையும் சேர்த்திருப்பதாக செய்தி வந்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அனுமதி பெறாமல் விசாரித்துள்ளனர், இந்த வழக்கை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளது திமுக அரசு என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே வழக்கு போட்டுள்ளனர் என எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார்.

திமுகவின் 100 நாள் ஆட்சியில் மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.