
மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் மறைவையடுத்து, அந்த ஆதினத்தின் 293 ஆவது பீடாதிபதியாக தான் பதவி ஏற்றுக்கொண்டுள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.
293 ஆவது பீடாதிபதியாக தான் பதவியேற்றுக்கொண்டுள்ளதாகவும் இனி ஒன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் தனது முகநூல் பக்கத்தில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்தின் 292 ஆவது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 12 ஆம் திகதி காலமானார்.
அவரது உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது மறைவுக்குப் பின்னர் ஆதீன மடத்தில் அன்றாடப் பூஜைகளை இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்தி தம்பிரான் மேற்கொண்டுள்ளார்.
ஆனால், அவர் ஆதீன சிம்மாசன பீடத்தில் அமரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆதீன சம்பிரதாயங்களின்படி இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்தி தம்பிரான் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக பட்டம் சூட்டப்படவுள்ளார்.
தற்போது அதற்கான ஏற்பாடுகளை ஆதீன மடத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இளைய சன்னிதானமாக சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முறைப்படி 2019ஆம் ஆண்டே நியமித்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் ஆதீனமாக சிம்மாசனத்தில் அமர உள்ளதால் அவரது பெயர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் என்று மாற்றப்பட்டுள்ளது.
ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்த 10 ஆவது நாளில் நடக்கும் குரு பூஜைக்குப் பிறகு இளைய சன்னிதானம், மதுரை ஆதீனத்தின் பீடத்தில் முறைப்படி ஏறி ஆதீன மடத்தின் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
இதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனத்தின் மடாதிபதிகள் முன்னிலையில், இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையிலேயே தனது பெயரை 293 ஆவது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும் நித்யானந்தா கூறியுள்ளார்.
ஏற்கனவே மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியவர் நித்தியானந்தா, மீண்டும் அருணகிரிநாதரின் மறைவையடுத்து மதுரை ஆதீன விடயங்களில் தலையிட்டு பல்வேறு அறிவிப்புகளையும் கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார்.