June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்’; மத்திய அரசு

பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற அவையை இயங்கவிடாமல் செய்த பெகாசஸ் மென்பொருள் ஒட்டு கேட்பு விவகாரம் தற்போது இந்திய அரசியலில் சூடு பிடித்துள்ளது.

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் தொலைபேசிகள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அண்மையில் இந்திய நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் பெகாசஸ் மூலம் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று (16) தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்தியர்கள் யாரையும் தாங்கள் உளவு பார்க்கவில்லை என கூறப்பட்டுள்ளதுடன், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.