November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அ.தி.மு.க ஆட்சியில் அளிக்கப்பட்ட பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை’; ஸ்டாலின் விமர்சனம்

(FilePhoto)

தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13 ஆம் திகதி பொது நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 14 ஆம் திகதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து சட்டப் பேரவையில் தற்போது நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கவே தி.மு.க வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமார் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர்;

‘விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கணக்கு போட்டு பார்த்தால், அதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றை எல்லாம் சரி செய்த பின்னரே தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என உறுதி அளிக்கிறேன்.

அ.தி.மு.க ஆட்சியின்போது அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை.

மேலும், கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை தான் நீங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்களே தவிர, பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ,அதனை மறந்து விடக்கூடாது.

சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர், அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளார்.

”ஆவின் பால் பாக்கெட் ரூ.25 க்கு தரப்படும் என சொன்னீர்கள், கொடுத்தீர்களா? இலவச செல்போன் தந்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் கொடுப்போம் என சொன்னீர்கள், யாருக்காவது கொடுத்தீர்களா? ” என அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் எடுத்துக் காட்டியுள்ளார்.

அதேவேளை, ”இவ்வாறு பட்டியலிட்டு காட்டுவதால் அ.தி.மு.க நிறைவேற்றவில்லை என்பதற்காக தங்களது ஆட்சியில்  செய்ய மாட்டோம் என சொல்வதற்காக அல்ல.

உறுதியாக முறைகேடுகளை களைந்து, நிதிப் பற்றாக்குறையை சரிசெய்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்களது இலட்சியம், பணி எனவும் அதனால் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என தமிழக முதலமைச்சர் சட்டப் பேரவையில் அ.தி.மு.க.வினர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.