
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல் முறையாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அதேநேரம் சென்னை சிவானந்தா சாலையில் உள்ள சுதந்திர தின நினைவுத் தூணையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நினைவுத்தூண் 5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
இதன்போது, இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்க, உயிரையும் இரத்தத்தையும் வாழ்க்கையும் அர்ப்பணித்த இந்தியர்கள் அனைவருக்கும் தனது வீரவணக்கம் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த தான் தமிழக மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை 17,000 ரூபாவிலிருந்து இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும் என இந்திய சுதந்திர தினத்தில் உறுதி வழங்கியுள்ளார் தமிழக முதலமைச்சர்.
தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சுக் காற்றை கொண்டு கட்டப்பட்டது தான் நினைவுத் தூண். வெறும் கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல, விடுதலைப் போராட்ட வீரர்களின் இரத்தத்தால், எலும்பால், சதையால் உருவாக்கப்பட்டது என தனது உரையில் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா எதிர்ப்பு போரில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். தமிழகத்தில் 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி வீணடிக்கப்பட்ட நிலையை மாற்றி கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் தமிழ்நாடு ஒருசேர வளர வேண்டும் என்பது தான் நம்முடைய கனவு, அதனை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருகிறது என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#IndiaIndependenceDay-வில் தலைமைச்செயலகக் கோட்டைக் கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, பல்வேறு விருதுகளைப் பெற்றவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினேன்.
விடுதலைக்குப் பாடுபட்டோர் காணவிழைந்த மேன்மைமிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
வாழ்க தமிழ்நாடு! வாழ்க இந்தியா! pic.twitter.com/QAnmJwJ4gi
— M.K.Stalin (@mkstalin) August 15, 2021