July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடிஇன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடியை  பிரதமர் ஏற்றிவைத்தார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.

பிரதமர் தேசியக் கொடியை ஏற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

சுதந்திர தின விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

இந்த சுதந்திர தின நாளில் காந்தி, நேதாஜி, உள்ளிட்ட தலைவர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாட்டுக்காக பாடுபட்ட நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரின் அரும்பணிகளையும் நினைவுகூர்வோம் என மக்களிடையே கேட்டுக்கொண்டார்.

75 ஆவது சுதந்திர தினத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் தன்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்தார் பிரதமர் மோடி.

ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட நமது விளையாட்டு வீரர்களை பாராட்டுவோம் எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பாக விளையாடிய அவர்கள், தேசத்தின் பெருமையை ஒலிம்பிக்கில் நிலைநாட்டினர் என புகழ்ந்துள்ளார்.

கொரோனா மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக மாறியது என இந்திய பிரதமர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது.

நாட்டில் இதுவரை 54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவினுடையது என மோடி தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா போரில் அனைவரும் மிகுந்த பொறுமையுடன் போராடினர்.
நாம் ஒவ்வொரு பகுதியிலும் அசாதாரண வேகத்தில் வேலை செய்தோம்.

இது நமது இந்திய விஞ்ஞானிகளின் பலத்தின் விளைவாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இன்று இந்தியா தடுப்பூசிகளுக்கு வேறு எந்த நாட்டையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனவும் பிரதமர் கூறியிருக்கிறார்.

ரயில்வே, நீர்வழி போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன; சிறு நகரங்களை இணைக்கும் வகையில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையங்கள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன.

விவசாயத்தில் புதுமையை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அடுத்த தலைமுறையினருக்கு கட்டமைப்புகளை ஏற்படுத்த உழைத்து கொண்டிருக்கிறோம்.

விவசாயிகள் நலனுக்காக விளை பொருட்களை சேமித்து வைக்க ஏதுவாக கிராமங்கள் தோறும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என பிரதமர் சுதந்திர தின உரையில் தெரிவித்திருக்கிறார்.

நமது கிராமத்து விவசாயிகளின் விளை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,விவசாயிகள் நலனுக்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நாம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் உள்ளது, புதிய இந்தியாவை சிறப்பாக கட்டமைக்க கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது என இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது, கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாம் கைபேசிகளை இறக்குமதி செய்த நிலை போய், தற்போது 3 பில்லியன் கைபேசிகளை ஏற்றுமதி செய்கிறோம் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்ததாகவும், உலக தரத்துக்கு இணையாகவும் இருக்க வேண்டும் என செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பின் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்திருக்கிறார்.