July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாட்களில் இரண்டு மடங்கு உழைப்போம்”

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என்று ஏமாற்ற மாட்டேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைகின்றது.இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரு நாட்களாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப் பேரவையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,இன்று பேசிய எல்லோருமே 100 நாட்களை கடந்தது குறித்து பெருமையாக பேசினீர்கள்.ஆனால் தனக்கு அடுத்து வரும் காலத்தை பற்றிய நினைப்பாகவே இருந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இன்னும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்தி இருப்பதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது இந்த 100 நாட்கள் நிறைவில்,எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது.வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாட்களில் நாம் இரண்டு மடங்கு உழைக்க வேண்டும்.

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம் என உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. படிப்படியாக அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி.

இந்த 100 நாட்கள் நிறைவில் சிறப்பான பெயரை பெற்றிருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலின்போது வாக்களிக்காதவர்கள் கூட தற்போது தேர்தல் நடந்தால் தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.

இந்த நூறு நாளில் பெற்ற நற்பெயரை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தில் கொரோனா சூழ்ந்திருந்தது. அதனை தடுக்க போர்க்கால முறையில் இணைந்து செயல்பட்டதை நினைவு கூர்ந்தார் முதலமைச்சர்.

முதல் ஒரு மாத காலமும் அம்புலன்ஸ் சத்தம் எங்களை நிம்மதியாக இருக்க விடவில்லை.

மருத்துவமனைகளில் இடமில்லை, ஒக்சிஜன் பற்றாக்குறை என வரிசையாக பல செய்திகள் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன.

கொரோனா சூழ்நிலையை சமாளிக்க வார் ரூமை ஏற்படுத்தி, மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டு,முடிந்தவரை நிவர்த்தி செய்தோம்.

தற்போது கோரிக்கைகளே வராத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம்.லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதே இந்த 100 நாளில் செய்த பெரிய சாதனை.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

வரியில்லாத பட்ஜெட்டை நாங்கள் கொடுத்திருக்கிறோம்.இப்போது தான் தொடங்கியிருக்கிறோம்.அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில், எனது தந்தை கருணாநிதி கூறியதைப் போன்று, சொன்னதை செய்வோம், செய்வதைச் சொல்வோம்.அவர் இருந்து செய்ய வேண்டியதை அவருடைய மகன் நிச்சயம் செய்வான்.

நாள் முழுக்க நாட்டுக்காக உழைக்கிறோம்.தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த 100 நாட்கள் தந்திருக்கிறது.

நிதி நிலைமை மட்டும்தான் கொஞ்சம் கவலை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.நிதி நிலையையும் விரைந்து சீர்செய்து,சீர்மிகு தமிழகத்தை உருவாக்குவோம்.

நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் இவற்றை எனது தோள் மீது சுமக்க தயாராகி விட்டேன்.இது எனது அரசு அல்ல, நமது அரசு இதுதான் என் கொள்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .