July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ராகுல் காந்தி உட்பட 23 பேரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்’: பாஜக கூட்டு சதி என்கிறார் பிரியங்கா காந்தி

காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளிட்ட 23 பேரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவதற்கு, பாஜக மற்றும் டுவிட்டர் இந்தியாவின் கூட்டு சதியே காரணம் என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் டெல்லி தென் மேற்கு பகுதியில் தலித் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, மின் மயானத்தில் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த பதிவு டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு, தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் சுவாசத்தை திணறடிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் டுவிட்டர் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனம் காங்கிரஸ் தலைவர்களின் கணக்குகளை முடக்குவதற்கு தனக்கான சொந்த கொள்கையை பின்பற்றுகிறதா? அல்லது நரேந்திர மோடி அரசின் கொள்கையை பின்பற்றுகிறதா? என பிரியங்கா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், அஜய் மாக்கன், ரன்தீப் சுர்ஜேவாலா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட 23 பேரின் டுவிட்டர் கணக்குகள் மற்றும் காங்கிரஸின் ஐஎன்சி இந்தியா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ் நாடு காங்கிரஸ் உட்பட கட்சியின் 7 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாஜக அரசுடன் கூட்டு சேர்ந்துள்ள டுவிட்டர் நிறுவனம் தற்போது 23 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கணக்குகளையும் காங்கிரஸின் ஏழு கணக்குகளையும் முடக்கி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பிரியங்கா காந்தி, நீதிக்கான குரலை நசுக்க பாஜக அரசு முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

‘டெல்லி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பிறகு எப்ஐஆர் பதிவு செய்ய பொலிஸார் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?’ என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.