November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நித்யானந்தாவின் அறிவிப்பால் மதுரை ஆதினத்தின் அறைக்கு சீல் வைப்பு

தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின் அடுத்த தலைவர் தான் என நித்யானந்தா அறிக்கை வெளியிட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மதுரையின் தற்போதைய ஆதீனம் அருணகிரி நாதர் அறைக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் தொன்மையான சைவ திருமடமான மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதியாக இருக்கும் அருணகிரிநாதருக்கு, சுவாச கோளாறு பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் திடீரென முகநூல் பக்கத்தில் மதுரை ஆதீனம் விரைவில் நலம் பெற வேண்டும் என நித்யானந்தா பதிவிட்டிருக்கிறார்.

தற்போது நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது.இன்றும் அவர் தேடப்படும் நபராகவே இருக்கிறார்.

இந்நிலையில் முகநூல் பதிவில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 ஆவது பீடாதிபதி என்று குறிப்பிட்டிருக்கிறார் நித்யானந்தா.

அதில் ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளுக்கும்,மத ரீதியான சடங்குகள், பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகளையும் தாம் பெற்றுள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளார்.

இதனால் சமய தலைவர்கள் இடையே சற்று பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு நித்யானந்தா உரிமை கோரிய நிலையில், தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் மதுரை ஆதீன அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆதீனத்தின் அறையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள் இருப்பதால் சீல் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முன்னொருமுறை மதுரை ஆதினத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டு பின்னர் அதனை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நித்யானந்தாவின் நடவடிக்கைகள் குறித்து புகார் எழுந்துள்ள நிலையில்,அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அறிவிக்கப்பட்ட இளைய ஆதீன பொறுப்பு திரும்ப பெறப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெருமை வாய்ந்த சைவ திருமடமான தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி, ஆதீனங்களின் வழக்கமான நடைமுறையாகவே மதுரை ஆதினத்தின் அறை சீல் வைக்கப்பட்டதா கூறியிருக்கிறார்.

கூடிய விரைவில் அவர் குணமடைந்து வர வேண்டுமென்பதே தங்களின் விருப்பம் என அவர் தெரிவித்திருக்கிறார்.