July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்தது!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை 90சதவீத நிறைவடைந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக அரசு சார்பில், 2017ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, அது குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் இன்னும் இந்த விசாரணை நிறைவு பெறவில்லை.

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருவதாகவும், இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஆறுமுகசாமி ஆணையத்தை முடித்து வைக்க கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 11ஆவது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கிட்டத்தட்ட 90 சதவீத விசாரணை முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடையே தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டிருந்ததுடன் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.