November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக பட்ஜெட் – 2021: குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க திமுக உறுதி

(Photo: MKStalin/Twitter)

10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முதல் பட்ஜெட்டில் திமுக அரசு உறுதியளித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பின்னர், பல்வேறு திட்டங்களுடன் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் காகிதமில்லா பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21ஆம் திகதி வரை நடத்தப்படுகிறது.

6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த பட்ஜெட் நடப்பு நிதியாண்டின் ஆறு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை பெற நிபுணர் குழு அமைக்கப்படும் என பட்ஜெட் தாக்கலின்போது கூறப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் வரி உயர்வால் மத்திய அரசுக்கு 69 சதவீத வருவாய் அதிகரித்துள்ளது.

மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்திருக்கிறார்.

கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும் கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்டது.

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும், இதற்காக ரூ.433 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

அதேநேரம், 79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லீட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவிப்பு.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் கனவு திட்டமான ,சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.