January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்தியாவில் 15 கோடி பேர் அடிப்படை கல்வியை பெறவில்லை”

இந்தியாவில் சுமார் 15 கோடிக்கும் அதிகமானோர் அடிப்படைக் கல்வி முறையில் இருந்து விலகி உள்ளதாக இந்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.

குழந்தைகள்,இளைஞர்கள் என 15 கோடிக்கும் அதிகமானோர் அடிப்படைக் கல்வியை பெறவில்லை எனவும் ,மக்கள் தொகையில் 25 கோடி பேர் அடிப்படைக் கல்வி நிலையை முறையாக பெறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய கல்வித்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்திருக்கிறார் .

இந்தியாவில் 3 வயது முதல் 22 வயதுள்ளவர்கள் 50 கோடி பேர் வரையில் இருப்பதாக கூறப்படுகிறது.இதில் ஒட்டு மொத்த திறன்கள் அடிப்படையில் 35 கோடி பேர் வேலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறு கணக்கிடும்போது இதில் சுமார் 15 கோடி குழந்தைகள், இளைஞர்கள் அடிப்படை கல்வி அற்றவர்களாக இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கல்வியில் இருந்து விடுபட்டவர்களை கல்வி முறைக்குள் கொண்டு வருவது அவசியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது 19 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார் இந்திய கல்வித் துறை அமைச்சர்.

தற்போது இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நெருங்கிவிட்ட நிலையில், 80 வீதமானோர் கல்வியறிவை பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் 20 வீதம் பேர் கல்வி பெறாதவர்களாக இருப்பதாகவும் அதாவது சுமார் 25 கோடி பேர் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதனால் இந்தியாவின் 100 வது சுதந்திர தினத்திற்குள் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் முழுமையான கல்வியை எட்ட வேண்டும் என்பதே கல்விக் கொள்கையாக இருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.