July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அ.தி.மு.க.வினரைப் பழிவாங்கும்‌ நடவடிக்கைகளில்‌ தி.மு.க அக்கறை காட்டுகின்றது’; அ.தி.மு.க கண்டனம்

அ.தி.மு.க.வினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தி.மு.க அக்கறை காட்டுகின்றதோ என்ற ஐயப்பாடு எழுவதாக அ.தி.மு.க தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த இலஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை குறி வைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனக் கூறியுள்ள அவர்கள், மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என தி.மு.க.வி.ற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

அ.தி.மு.க அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி  கொறடா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக  செய்திகள் வருகின்றன.

இதனால், தற்போது ஆளும் தி.மு.க அரசு மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், அ.தி.மு.க.வினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும், வருத்தமும் மனதில் எழுகின்றது என ஓ. பன்னீர் செல்வமும் ,எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

துடிப்பான அ.தி.மு.க.வின் செயல் வீரரான எஸ். பி வேலுமணி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம்.

மேலும், ‘அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க, அ.தி.மு.க எப்பொழுதும் தயாராகவே உள்ளது.

ஆனால், ஆதாரம் ஏதுமின்றி, உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.