November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடல் வழி பாதுகாப்பு,வர்த்தகம் தொடர்பான 5 முக்கிய திட்டங்கள் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கூட்டத்தில் இந்திய பிரதமர் உரை

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.அதில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும் இந்தியா உட்பட பல நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் அங்கம் வகிக்கின்றன .

இந்நிலையில், ஐ.நா.கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் தலைமை தாங்கி வருகின்றன.

அந்த வகையில் இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு இந்தியா சார்பில் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

ஐ.நா.பாதுகாப்பு கூட்டத்தில் முதன் முறையாக பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடல்வழி பாதுகாப்பு மற்றும் கடல்வழி வர்த்தகம் தொடர்பான ஐந்து முக்கிய திட்டங்களை முன்வைத்திருக்கிறார்.

இதன் மூலம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நரேந்திர மோடி.

தனது முதல் உரையில் இந்திய பிரதமர்,கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளார்.கடல் எல்லைப் பகுதிகள் தொடர்ந்து பல்வேறு விதமான சவால்களையும் சந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச கடல் பகுதியானது தனிப்பட்ட மற்றும் தீவிரவாதத்திற்கு தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் அவர் இந்த பாதுகாப்பு கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.

சர்வதேச வணிகத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது கடல் வழித்தடம் என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,எதிர்காலத்திலும் இவற்றை பாதுகாக்க கடல் வழி பாதுகாப்பு குறித்த ஐந்து திட்டங்களை முன் வைத்திருக்கிறார்.

*சர்வதேச சட்ட திட்டத்தின் அடிப்படையில் கடல்வழி வணிகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்த்தல்

* சுதந்திரமான வர்த்தகத்தை நிறுவுவதற்கு தடையில்லா கடல் வாணிபம் நடைபெற வேண்டும்.

*இயற்கை பேரிடர்களால் ஏற்படும் கடல் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ள நடவடிக்கை

*கடல் வழித்தட இணைப்பை ஊக்குவிக்க வேண்டும்.

*கடல்சார் சூழல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க நடவடிக்கை

உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்சங்களை முன்வைத்து பிரதமர் மோடி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியிருக்கிறார்.