தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதேநேரம், முன்னர் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க வகுத்த திட்டங்களுக்குத்தான் தி.மு.க.வினர் தற்போது அடிக்கல் நாட்டுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த அ.தி.மு.க அரசில் முடித்து வைத்திருந்த பணிகளுக்குத்தான் தற்போது திறப்பு விழா செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தி.மு.க 100 நாட்கள் கழித்துதான் சட்டப் பேரவையையே கூட்டுவதாக கூறியுள்ள பழனிச்சாமி, இந்த நூறு நாட்களில் எந்த திட்டத்தையும் செய்யவில்லை என கூறியுள்ளார்.
தான் முதலமைச்சராக இருந்தபோது சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை அறிவித்து சுமார் 9 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களை பெற்று அதில் 5 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
அதே திட்டத்தை தான் தி.மு.க.வும் கடைப்பிடிப்பதாக கூறியுள்ள பழனிசாமி, ஆனால் அந்த அளவுக்கு அவர்கள் மனு வாங்கவில்லை எனவும் தீர்வும் காணவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆட்சியில் அமர்ந்ததும் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டனர் எனவும் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனவும் கூறினார்கள்.ஆனால் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்ய என்ன தீர்வை கண்டனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை, அறிவிப்புகளுக்கு மேலாக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாததை கண்டித்து தான் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதன்போது தெரிவித்துள்ளார்.