November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எந்த நேரத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்”: இந்திய விமானப்படை வீரர்களுக்கு அறிவுறுத்தல்

இந்தியாவின் எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாததால் விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்குமாறு தென்மண்டல தலைமை தளபதி மன்வேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே மன்வேந்திர சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே நிற்பதால், எந்த நேரத்திலும் களத்தில் பணியாற்ற தயாராக இருக்குமாறு விமானப்படை வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தீவிர கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ நிவாரணப் பொருட்கள், ஒக்சிஜன் கொள்கலன்களை உரிய நேரத்தில் தேவையான இடங்களுக்கு கொண்டு சேர்த்தது என, தஞ்சாவூர் விமானப் படை வீரர்கள் மேற்கொண்ட பணியை தலைமை தளபதி மன்வேந்திர சிங் பாராட்டியுள்ளார்.

அத்துடன் அண்மையில் இந்திய கடற்பரப்பில், இந்திய விமானப் படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து மேற்கொண்ட பன்னாட்டு கூட்டுப் பயிற்சியில் தஞ்சாவூர் விமானப்படை வீரர்கள் முன்னிலை வகித்ததையும் தலைமை தளபதி வரவேற்றுள்ளார் .

விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்றுவதற்கான திறமையுடன், உறுதித் தன்மையுடன் தயாராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.