January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

120 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் நீரஜ் சோப்ரா; தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தடகள போட்டிகளில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை வென்று எடுத்த நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 32 ஆவது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து, அவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் ,120 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தவர் நீரஜ் சோப்ரா என்று தமிழக முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.தடகள போட்டிகளில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்தியாவின் நெடுங்கால கனவை நீரஜ் சோப்ரா நனவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தங்க மகன் என நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பானிபட்டிலில் உள்ள அவரது வீட்டின் முன் தேசியக் கொடியுடன் திரண்ட மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 120 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த நீரஜ் சோப்ராவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நூறு கோடி இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையுணர்வை விதைத்துள்ளீர்கள் எனக் குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ,உண்மையிலேயே நாட்டின் நாயகன் தாங்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல்,ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அளித்துள்ள பேட்டியில் நம்பவே முடியாத ஒன்று நடந்தது போல உணர்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.

தனக்கும்,நாட்டுக்கும் பெருமிதமான தருணம் இது என டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.