January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல்!

(Photo: Indiannavy/Twitter)

முதல் முறையாக இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான விமானம் தாங்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி கப்பலை தயாரிக்க மத்திய அரசு கடந்த 2003 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான விமானம் தாங்கி கப்பலின் கட்டுமானப் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.

40 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தக் கப்பல் கட்டும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலுக்கு ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ என பெயரிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1961 இல் பிரிட்டனிடமிருந்து முதல் விமானம் தாங்கி கப்பலை இந்தியா வாங்கியதாகவும், ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்’ என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் 1997 ஆம் ஆண்டு கடற்படையில் இருந்து இந்த கப்பல் விடுவிக்கப்பட்டதையடுத்து தற்போது இந்தியாவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பலுக்கு, பிரிட்டனிடம் இருந்து வாங்கிய பழைய கப்பலை நினைவு படுத்தும் வகையில், ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் இருந்து, மிக்-29 கே சூப்பர் சொனிக் போர் விமானங்கள், எம்.எச். 60.ஆர் பல்நோக்கு ஹெலிகொப்டர்கள், போன்றன இயக்கி சோதனை நடத்தப்படவுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலின் சோதனை ஓட்டம் யாவும் முடிவதற்கு ஓர் ஆண்டு ஆகும் என கூறப்படுகிறது.

தற்போது ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பல் இந்திய கடற்படையில் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.