June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் இதுவரை புகார் அளிக்காதது ஏன்?; உச்சநீதிமன்றம் கேள்வி

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை புகார் அளிக்காதது ஏன்? என டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரம், பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை எனவும் 2019 ஆம் ஆண்டிலேயே இந்த விவகாரம் வெளிவந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவசரமாக இதனை கையாள வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என தலைமை நீதிபதி கேட்டுள்ளார்.

மேலும், பெகாசஸ் விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக ,இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டத் தொடரை நடத்த முடியாமல் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக தொடர்ந்து முடங்கியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.