நடிகர் தனுஷ் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை கண்டித்துள்ளது.
அதற்கமைய சொகுசு காருக்கான மீதி வரிப் பணத்தை செலுத்த தனுஷுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் பாதி வரியைக் செலுத்திய நிலையில் வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பியதுடன் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவில் அவரின் வேலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் வரி பணத்தில் போடப்பட்ட சாலையில்தான் காரை ஓட்டப் போகிறீர்கள், வெளிநாட்டு கார் வாங்கினால் வானிலா பறக்க முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அத்தோடு ‘பால்காரர் மற்றும் ஏழைகள் கூட பெட்ரோலுக்கு வரி செலுத்தும்போது, இந்த வரியை செலுத்த முடியவில்லை என நீதிமன்றத்தை நாடுவதா’? என்று தெரிவித்துள்ளார்.
‘நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள், ஆனால், செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள் என கூறியுள்ள நீதிபதி நுழைவு வரி மீதியை செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு 60.66 இலட்சம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து நடிகர் தனுஷ் நுழைவு வரி வசூலிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 50 சதவிகித வரியை செலுத்தி காரை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு 30.33 இலட்சம் ரூபாய் வரியை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விதிகளைப் பின்பற்றி பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கு மீண்டும் இடையில் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் ஆகஸ்ட் 5ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தான் இந்த வழக்கையும் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.