தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 8 ஆம் திகதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன்,மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற போது, மத்திய அரசு வெளியிட்ட விவரத்தில் எல்.முருகன் பிறந்தது நாமக்கல் மாவட்டம், ‘கொங்கு நாடு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் தமிழ்நாடு என்ற மாநில பெயருக்கு மாற்றாக கொங்குநாடு என பிரித்து போடப்பட்டிருந்தது பல்வேறு தரப்பில் விமர்சனத்திற்கு உள்ளானது .
இதற்கு ஆளும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
தற்போது இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இருவர் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு மாநிலத்தையும் இரண்டாகப் பிரிப்பதற்கு மத்திய அரசு திட்டம் வைத்துள்ளதா?என எழுத்துபூர்வமாக கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்,தற்போது, மாநிலங்களை பிரிப்பதற்கான திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் தனிநபர்களிடமிருந்தும், அமைப்புகளிடமிருந்தும் பல்வேறு காலகட்டங்களில் வந்திருக்கிறது.
ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவது நமது நாட்டின் கூட்டாட்சி அரசியலில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தான் புதிய மாநிலங்களை உருவாக்கும் விஷயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார்.
தமிழகம் உட்பட எந்தவொரு மாநிலத்தையும் இரண்டாக பிரிப்பதற்கான திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.