July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாடாளுமன்றத்தையும், மக்களையும் எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன’; மோடி குற்றச்சாட்டு

(FilePhoto)

நாடாளுமன்றத்தையும், மக்களையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவமானப்படுத்துகிறார்கள் என இந்தியப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று (03) நடைபெற்ற பா.ஜ.க எம்.பி.க்களின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்றத்தையும், மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களின் அவதூறான பேச்சால் அவமானப்படுத்துகிறார்கள் என மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்தியதாகவும் எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த எம்.பி.திரிணமூல் கட்சியைச் சேர்ந்த ஓ. பிரையன், மசோதாக்கள் நிறைவேற்றியது குறித்து அவதூறாகப் பேசியதற்கும் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அனைத்து மசோதாக்களையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, எதிர்க் கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் நடந்து கொண்டதை பார்த்து பிரதமர் கடும் கோபமடைந்து விட்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கையிலிருந்து காகிதங்களை பறித்து கிழித்த சம்பவம், நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமானப்படுத்தும் செயல் என கூறியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகிறன.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க கோரி நாடாளுமன்றத்தில் நாள் தோறும் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்ற அவை நடவடிக்கை யாவும் முடங்கிப் போயுள்ளன.

பா.ஜ.க எம்.பி.க்களின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், முரளிதரன், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.