January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்றதில் பெருமிதம் கொள்கிறேன்; குடியரசுத் தலைவர் தெரிவிப்பு

தமிழகம் வந்துள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ் நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது குடியரசு தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மகாகவி பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய குடியரசுத் தலைவர், “மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம் ,வான அளப்போம் கடல் மீனை யளப்போம் ,சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்திருக்கிறார் .

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நன்னாளில்,தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பல முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இந்த தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக குடியரசு தலைவர் கூறியுள்ளார்.

ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்ட சபை மிகவும் சிறப்பான அமைப்பாக இருக்கிறது எனவும் தனது உரையின் போது அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா இந்த ஆண்டு பல துறைகளில் சாதனை படைத்துள்ளது.
தமிழ் இலக்கியத்திற்கும்,தமிழ் சினிமாவிற்கும் பெரும் பங்காற்றியவர் கருணாநிதி.தனது புரட்சிகரமான கருத்துகளால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் திருவள்ளுவர்,மகாத்மா காந்தி,ராஜாஜி, அண்ணா, காமராஜர்,பெரியார், அம்பேத்கர்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா,
உள்ளிட்ட பலரின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது 16 வது தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது .