தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு கலைஞர் கருணாநிதியின் உருவ படத்தை திறந்து வைத்தார்.
யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது.
படத்திற்குக் கீழே ’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி சென்னை மாகாணமாக இருந்தபோது ,மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரவை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் , தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப் படத்தைச் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த குடியரசுத் தலைவரை ,விமானநிலையத்தில் வைத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் .
பின்னர் தமிழக ஆளுநர் மாளிகையில் தங்கிய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாலை 5 மணி அளவில் சட்டப்பேரவைக்கு சென்று நிகழ்வில் கலந்துகொண்டார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் உருவப்படம் திறக்கப்படும் 16 ஆவது தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் என்பது குறிப்பிடத்தக்கது.