தமிழகத்தில் தற்போது ஆட்சி புரிந்து வரும் தி.மு.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான அ.தி.மு.க போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதேபோன்று,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது தி.மு.க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது.
பெற்றோல் விலை ரூ.5 ,டீசல் விலை ரூ.4 குறைப்பு குறித்த வாக்குறுதி,நீட் தேர்வு ரத்து, குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு,மேலும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என அ.தி.மு.க தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில்,தி.மு.க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அ.தி.மு.க.வினர் தத்தமது சொந்த ஊர்களில் வீடுகளின் முன்பாகவும் அ.தி.மு.க கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
அதன்படி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியிலும்,எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திலும் இல்லத்தின் முன்பு தி.மு.க அரசை எதிர்த்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட,அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோர் தமிழக மக்களின் உரிமைக் குரலாய் ஒலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
தி.மு.க.வு.ம்,மு.க.ஸ்டாலினும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்,ஜனநாயக விரோதப் போக்கினை தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்துள்ளதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதனை மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவும்,தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
அதேபோல்,சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தி.மு.க அரசை கண்டித்து விமர்சன பாடலுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்,ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழக மாணவர்களை ஏமாற்றாதே,அண்ணாச்சி அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சி, விண்ணை முட்டுது விலைவாசி,சொன்னதை செய் தி.மு.க.வே போன்ற வாசகங்களுடன் பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர்.