October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை திடீரென ராஜனாமா செய்ததனையடுத்து கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி குறித்து நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதியமுதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜனதா தள கட்சியை சேர்ந்த பசவராஜ் பொம்மை 2008 ஆம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார்.இவர் 2019 ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

61 வயதாகும் பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை, 1988 ஆம் ஆண்டளவில் கர்நாடக மாநில முதல்வராக இருந்துள்ளார்.