July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 9 சுற்றுலா பயணிகள் பலி!

இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் கொல்லப்பட்டவர்களில் சிலர் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரபல சுற்றுலா கிராமமான சிட்குலுக்கு வருகை தந்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ளன.

சுற்றுலா பயணிகள் சென்ற டெம்போ வாகனம் சங்லா பள்ளத்தாக்கை கடந்து பயணித்த போது பெரிய பாறைகள் மலையில் இருந்து உடைத்து உருண்டு கீழே பள்ளத்தாக்கில் விழுந்துள்ளன.

இவ்வாறு உடைத்து வந்த கற்பாறைகள் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தின் மீது விழுந்தமையையடுத்து அதில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பாறைகள் மலையின் அடிவாரத்தில் கார்களை தாக்கி, ஒரு பெரிய மேக தூசியை ஏற்படுத்தியுள்ளன.அத்தோடு அங்குள்ள பாலத்தின் மீது விழுந்ததில் அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஆற்றில் மூழ்கியுள்ளது.

இந்த திடீர் சம்பவத்திற்கு என்ன காரணம் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.ஆனால் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கின்றேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேற்கு மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கோவா, தெற்கில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை நாட்டில், நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், நான்கு நாட்களில் அனர்த்தங்களில் சிக்கி மொத்தம் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.