November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு டிரக்டரில் வந்த ராகுல் காந்தி

photo:Rahul Gandhi_twitter

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி,டெல்லியின் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாகவும் விவசாயிகளின் பிரச்சினையில் தீர்வு காண வலியுறுத்தியும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (26) டிரக்டர் செலுத்தியவாறு நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் டிரக்டரில் ஊர்வலமாக வந்து,மத்திய அரசுக்கு எதிராகவும்,வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண இதுவரை,மத்திய அரசாங்கத்துடன் 12 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அது தோல்வியில் முடிவடைந்தது.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,விவசாயிகளின் குரல்களை மத்திய அரசு நசுக்குகிறது.அதனால் விவசாயிகளின் சார்பில் அவர்களின் கருத்துகளை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருப்பதாக ராகுல் காந்தி இதன்போது குற்றம்சாட்டி இருக்கிறார்.

வேளாண் சட்டங்கள் போர்வையில் இருக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில்,விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது எனவும் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அனைவரும் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டங்களை அடுத்து,வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த சட்டங்களை ஆய்வு செய்யக் குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .