July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாராஷ்டிராவில் தொடர் மழையால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

(Photo: vijayjdarda/Twitter)

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் மழை வெள்ளத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விடாமல் பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 136 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகளில் சிக்கித் தவிக்கும் மக்களை இரவு, பகல் பாராது மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளப் பெருக்கால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் ராய்காட் மற்றும் சதாரா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் நகரம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் கோவாவில் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மும்பை – கோவா நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம், மகாதாயி நதிநீர் ஊருக்குள் புகுந்ததில், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் மழையால் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.