பெகாசஸ் உளவு பார்த்ததாக கூறப்படும் விவகாரத்தால் கடந்த மூன்று நாட்களாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், 3-வது நாளான வியாழக்கிழமை(22) மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் தொடர்பாக ஒரு அறிக்கையை வாசித்துள்ளார்.
அப்போது மாநிலங்களவையில் அமளி ஏற்படவே,திடீரென குறுக்கிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சாந்தனு சென் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கையிலிருந்த நகலைப் பறித்து அதைக் கிழித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி எறிந்துள்ளார்.
இதனையடுத்து மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்படவே மூன்றாவது நாளாக கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் உளவு பார்த்த விடயம் தொடர்பாக அமளி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்த்ததாக மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன .
40 பத்திரிகையாளர்கள் உட்பட அமைச்சர்கள்,முக்கிய அரசியல்வாதிகள் என 300 க்கும் மேற்பட்டோரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாக எழுந்த சர்ச்சையே தற்போது இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில்,எதிர்க்கட்சிகள் அனைத்தும்,தற்போது ஆளும் மத்திய அரசை குறை கூறி குற்றம் சாட்டி வருகின்றன.