தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பொலிஸார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
ஆட்சியில் இருந்தபோதே போக்குவரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவிகளில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக வீடு, நிறுவனங்கள், உறவினருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பொலிஸார், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார் எம் ஆர் விஜயபாஸ்கர்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
எம்ஆர் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை சேர்த்ததாக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது.