July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வங்கக் கடலில் இந்திய, பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி

வங்கக் கடலில் இந்திய, பிரிட்டன் கடற்படைகள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கூட்டுப் போர்ப் பயிற்சியை நடத்த உள்ளன.

பிரிட்டனின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஹெச் எம்எஸ் குயின் எலிசபெத் இந்தக் கூட்டுப் போர்ப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளது.

தமது கடற்படையின் வலிமையை வெளிக்காட்டும் விதமாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 40 நாடுகளுடன் தனித்தனியாகக் கூட்டுப்பயிற்சியை பிரிட்டன் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து, தென் சீனக் கடலை, சொந்தம் கொண்டாடி வருவதாகச் கூறப்படும் நிலையில், அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கத்தேய நாடுகள் மேற்கொண்டு வருவதாக செல்லப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியா, பிரிட்டன் கடற்படைகள் இடையேயான இந்த கூட்டு போர் பயிற்சி நடைபெறுகிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சி இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த கூட்டுபோர்ப்பயிற்சியில் பங்கேற்பதற்காக, பிரிட்டனின் மிக பிரமாண்டமான போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் போா்க்கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளது.

ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் கப்பலில் எஃப்35பி போர் விமானங்களையும், 14 ஹெலிகாப்டர்களையும் நிறுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

பிரிட்டனின் குயின் எலிசபெத் கப்பலுடன் அவர்களுக்குச் சொந்தமான கடற்படையின் 6 கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இந்தியாவுக்கு வந்துள்ளன.

இந்திய பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு பயிற்சியானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலுள்ள கார்வார் துறைமுகத்தில் அக்டோபர் 21 முதல் 23 வரை இந்திய, பிரிட்டன் கடற்படையினர் போர்ப்பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் போர் பயிற்சியின்போது இந்தியாவின் ராஜ்புத் கப்பல் உள்ளிட்ட 12 போர்க்கப்பல்கள், 30-க்கும் மேற்பட்ட விமானங்களும் பங்கேற்கும் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி நடைபெற இருக்கிறது.

பிரிட்டன் மற்றும் இந்திய வீரர்களின் இந்த பல்வேறு வகையான பயிற்சிகளின் மூலம்
பாதுகாப்பு விவகாரத்தில் புதிய உறுதித் தன்மையை ஏற்படுத்தும் என பிரிட்டன் நம்பிக்கை வைத்திருக்கிறது.