பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருக்கிறார்.
தன்னுடைய தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுவதாக கூறியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னால் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் ஆபத்தானது, ஆக்ரோஷமானது என மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும்.இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் நீதித்துறை மட்டுமே காப்பாற்ற முடியும்.ஒரு குழு அமைத்து இவ்விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்க்க நாட்டின் அமைப்புகளை பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி,இதனை தனிப்பட்ட தாக்குதலாக பிரதமர் மோடி எடுத்துக் கொண்டாலும் தனக்கு கவலையில்லை என தெரிவித்திருக்கிறார்.
ஜனநாயகத்தின் தூண்களான ஊடகம், நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் பெகாசஸ் உளவு மென்பொருளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில்,இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,சரத் பவார், கோவா முதல்வர் ஆகியோருக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.
உங்களுடன் எல்லாம் தொலைபேசியில் பேச முடியவில்லை என கூறியுள்ள மம்தா பானர்ஜி, தனது தொலைபேசிக்கு பிளாஸ்டர் போட்டு வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அதேபோல்,இந்தியாவில் தற்போது உள்ள அரசின் மீதும் இவ்வாறானதொரு பிளாஸ்டர் போட வேண்டும்.
மக்கள் சுதந்திரம்,கல்வி,வேலைவாய்ப்பு, சுகாதார வளர்ச்சி, ,ஆகியவற்றையே எதிர்பார்ப்பதாக கூறியுள்ள மம்தா பானர்ஜி, ஆனால் மத்திய அரசோ மோதல்கள்,வன்முறை, பிரிவினைவாத அரசியல் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றன.
மேலும் எதிர்வரும் 27 ,28 ஆம் திகதிகளில் டெல்லி செல்ல உள்ளதாகவும் அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரேனும் சந்திக்க விரும்பினால் தான் தயாராக இருப்பதாகவும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருக்கிறார்.