இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஃபர்மிடன் ஸ்டோரிஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பை கண்டுபிடித்துள்ளதாக தி வயர் இணையத்தளம் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த விவகாரம் தற்போது இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகளும் தீவிரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த பெகாசஸ் உளவு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
இந்த சம்பவத்தை தேசத் துரோகம் என குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மூத்த தலைவருமான ரந்தீப் சுர்ஜேவாலா, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் பறி போயுள்ளது என கடுமையாக சாடியிருக்கிறார்.
இந்தியர்களின் தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் திருடுவதற்கு மோடி அரசு அனுமதித்துள்ளது என விமர்சித்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என கூறியுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, படுக்கையறை உரையாடல்களை கூட மத்திய அரசு ஒட்டுக் கேட்கும் என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்த விடயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ரந்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தியிருக்கிறார் .
அரசியல் சட்டத்தின்படி பதவியேற்ற அமித்ஷா, பிரதமர் மோடி இருவரும் அதனை மீறி விட்டார்கள் என சாடியுள்ளார்.
இது குறித்து பதில் அளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுவது எந்த ஆதாரமும் இல்லாதது என தெரிவித்திருக்கிறார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தி இதனை செய்வதாக கூறுவதில் துளியும் உண்மையும் இல்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேர்தல் பகுப்பாய்வாளர் பிரஷாந்த் கிஷோர்,தனது செல்போனை இதுவரை ஐந்து முறை மாற்றி விட்டதாக கூறியுள்ளார்.
இருந்த போதிலும் ஒட்டு கேட்பு பிரச்சனை இன்னும் முடியவில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.
2014 ல் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைய,மோடி பிரதமராக தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தவர் தான் இந்த பிரசாந்த் கிஷோர்.
இருந்தபோதிலும் அமித் ஷாவுடன் ஏற்பட்ட பிணக்கால் பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க.வுடனான தொடர்பை முறித்தார் எனக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் உத்தி வகுத்துக் கொடுத்து வருகிறார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கவும், தமிழகத்தில் தி.மு.க வெற்றி பெறவும் துணை நின்றவர் தான் இந்த பிரசாந்த் கிஷோர்.