காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கையடக்கத் தொலைபேசி மற்றும் அவரின் நண்பர்கள், ஆலோசகர்களின் கையடக்கத் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் செல்போன் உரையாடல்கள், வாட்ஸ்-அப் தகவல்கள், மெயில் என அனைத்துமே பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மற்றும் மத்திய அமைச்சர்கள், மம்தா பானர்ஜியின் உறவினரும் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி, மேலும் சில பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மற்றும் பல மத்திய அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள அஷ்வினி வைஷ்ணவின் தொலைபேசி தகவல்களும் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களின் கையடக்கத் தொலைபேசி ‘பெகாஸஸ் சொப்ட்வேர்’ (PEGASUS) மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை தேவை என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ‘பெகாஸஸ் மென்பொருள்’ மூலம் யாரையும் உளவு பார்க்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதேவேளை எதிர்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பதாக எதிர்க் கட்சி தரப்பு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால், நாளை (20)காலை வரை கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.